ஒளி என்பது ஒரு வகை ஆற்றல். அது நேர்க்கோட்டில் செல்லக்கூடியது. நம்மைச் சுற்றியுள்ள பொருள்களின் மீது பட்டு எதிரொளித்து நமது கண்களை அடைவதால்தான் நம்மால் அவற்றைக் காண முடிகிறது. இப்பாடத்தில் ஆடிகள், ஒளி எதிரொளிப்பு விதிகள், ஒளிவிலகல் மற்றும் நிறப்பிரிகை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
3.1 ஆடிகளின் வகைகள்
தன் மீது விழும் ஒளியை எதிரொளிக்கக்கூடிய பளபளப்பான பரப்பைக் கொண்ட ஒளியியல் சாதனமே ஆடி ஆகும். ஆடிகள் இரண்டு பெரும் வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: சமதள ஆடிகள் மற்றும் வளைவு ஆடிகள்.
வளைவு ஆடிகள் கோள, உருளை, பரவளைய மற்றும் நீள்வட்ட வடிவ பரப்புகளைக் கொண்டுள்ளன. ஒரு ஆடியின் வடிவமே அது உருவாக்கும் பிம்பத்தினைத் தீர்மானிக்கிறது.
3.1.1 கோளக ஆடிகள்
வளைவு ஆடி ஒரு கோளத்தின் பகுதியாகக் கருதப்பட்டால் அது கோளக ஆடி என அழைக்கப்படுகிறது. கோளக ஆடிகள் இரண்டு வகைப்படும்:
| ஆடியின் வகை | எதிரொளிக்கும் பரப்பு | பிம்பத்தின் தன்மை | பயன்பாட்டு எடுத்துக்காட்டு |
|---|---|---|---|
| குழி ஆடி | குழிந்த (உட்பரப்பு) | பெரிதான, மெய் பிம்பம் (பெரும்பாலும்) | ஒப்பனைக் கண்ணாடி, டார்ச் விளக்கு, சூரிய சமையற்கலன் |
| குவி ஆடி | குவிந்த (வெளிப்பரப்பு) | சிறிதான, நேரான, மாய பிம்பம் | வாகனங்களின் பின்காட்சி ஆடி |