பிரபஞ்சம் என்பது கற்பனைக்கெட்டாத அளவு பெரியது. அதில் விண்மீன் திரள்கள், கோள்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் அனைத்து வகையான பொருள்களும் ஆற்றலும் உள்ளன. இந்த அதிசய உலகத்தைப் பற்றி இந்த பாடத்தில் அறிந்து கொள்வோம்.
பிரபஞ்சத்தின் தோற்றம் – பெரு வெடிப்புக் கோட்பாடு
எல்லா விண்மீன் திரள்களும் நம்மிடமிருந்து விலகிச் செல்வது போலத் தோன்றின; தொலைவில் உள்ளவை விரைவாக நகர்வது போல் தெரிந்தன. விஞ்ஞானிகள் கடந்த காலத்தில் இவை அனைத்தும் ஒரு புள்ளியாகவே இருந்தன என்றும், பின்னர் விரிவடையத் தொடங்கின என்றும் கருதுகின்றனர்.
இவ்வாறு ஒரு புள்ளியில் பருப்பொருள் குவிந்து அங்கிருந்து விரிவடையத் தொடங்கிய நிகழ்வு பெரு வெடிப்பு (Big Bang) என அழைக்கப்படுகிறது. இதுவே நாம் இன்று காணும் பிரபஞ்சத்தின் தோற்றமாகக் கருதப்படுகிறது. சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சம் வெளிப்பட்டது.
பிரபஞ்சம் வெளிப்பட்ட போது நேரம், வெளி மற்றும் பருப்பொருள்கள் அனைத்தும் இந்த பெரு வெடிப்பிலிருந்தே தொடங்கின. 300,000 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபஞ்சம் குளிர்ச்சியடைந்து ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் ஆன கூட்டமாக இருந்தது. இந்த வாயுக்களில் இருந்தே முதல் நட்சத்திரங்களும் விண்மீன் திரள்களும் உருவாயின.