செல் உயிரியல் என்பது உயிரினங்களின் அடிப்படை அமைப்பு அலகான செல்லைப் பற்றி ஆராயும் அறிவியல் பிரிவாகும். நம் உடல் முதல் சிறு பாக்டீரியா வரை அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவை. இந்த அலகில் செல்லின் அமைப்பு, நுண்ணுறுப்புகள், தாவர மற்றும் விலங்கு செல்களின் ஒப்பீடு ஆகியவற்றை விரிவாக அறிந்துகொள்வோம்.
4.1 உயிரினங்களின் அடிப்படை அலகு - செல்
ஒரு கட்டிடம் செங்கல் சுவரால் ஆனது போல, நமது உடலும் பல செல்களால் ஆனது. உயிரினத்தின் அடிப்படை செயல் அலகு செல் என்று அழைக்கப்படுகிறது. செல்களே உயிரினங்களின் கட்டுமானப் பொருளாகும். அணுக்கள் பருப்பொருள்களின் அடிப்படை அலகு என்பது போல, செல்லே உயிரினங்களின் அடிப்படை அலகாகும்.
4.2 ஒரு செல் உயிரினங்கள் மற்றும் பல செல் உயிரினங்கள்
ஒரு செல் உயிரினங்கள்: சில எளிமையான உயிரினங்கள் ஒரே ஒரு செல்லால் மட்டுமே ஆனவை. இவை நுண்ணோக்கியின் உதவியுடன் மட்டுமே காண முடியும். எடுத்துக்காட்டாக அமீபா, க்ளாமிடோமோனாஸ், சால்மோனெல்லா பாக்டீரியா.
பல செல் உயிரினங்கள்: பல செல்கள் ஒன்றாக சேர்ந்து திசுக்களாகவும், உறுப்புகளாகவும், உறுப்பு மண்டலங்களாகவும் அமைக்கப்பட்டுள்ளன. வெங்காயம் மற்றும் மனிதன் பல செல் உயிரினங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.