மின்னோட்டவியல் என்பது மின்னூட்டங்களின் ஓட்டம், மின்சுற்றுகள், மின்கலன்கள் மற்றும் மின்னோட்டத்தின் விளைவுகள் பற்றி ஆராயும் அறிவியல் பிரிவு ஆகும். நம் அன்றாட வாழ்வில் மின்சாரம் இல்லாமல் எதுவும் இயங்காது — மருத்துவமனை, தொழிற்சாலை, கைபேசி, வீட்டு விளக்குகள் அனைத்தும் மின்சாரத்தை நம்பியே இயங்குகின்றன.
2.1 மின்னோட்டம் (Electric Current)
மின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம் எனப்படும். ஒரு சுற்றில் பாயும் மின்னோட்டமானது, ஒரு வினாடி நேரத்தில் கடத்தியின் ஏதேனும் ஒரு புள்ளி வழியே செல்லும் மின்னூட்டத்தின் அளவால் அளவிடப்படுகிறது.
மின்னோட்டத்தின் குறியீடு: I
சூத்திரம்: I = q / t
இங்கு q = மின்னூட்டம் (கூலூம்), t = நேரம் (விநாடி)
S.I. அலகு: ஆம்பியர் (A)
ஒரு வினாடியில் ஒரு கூலூம் மின்னூட்டம் பாய்ந்தால் அது ஒரு ஆம்பியர் எனப்படும்.
2.1.1 மரபு மின்னோட்டம் மற்றும் எலக்ட்ரான்களின் ஓட்டம்
எலக்ட்ரான்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர், நேர் மின்னூட்டங்களின் இயக்கமே மின்னோட்டம் என நம்பப்பட்டது. இது மரபு மின்னோட்டம் எனப்படும். மரபு மின்னோட்டம் மின்கலத்தின் நேர் முனை (+) இலிருந்து எதிர் முனை (−) வரை செல்லும்.