வேதியியல் என்பது பருப்பொருள்களின் அடிப்படைக் கூறுகள், அமைப்பு, பண்புகள் மற்றும் அவற்றில் ஏற்படும் மாறுதல்களைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு ஆகும். நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சோப்பு, உரங்கள், சிமெண்ட், பீனால் மற்றும் ஒட்டும் பொருள்கள் எல்லாமே வேதியியல் மாற்றங்களின் வழி தயாரிக்கப்படுகின்றன.
வேதியியல் மாற்றமும் இயற்பியல் மாற்றமும்
வேதியியல் மாற்றம் என்பது ஒரு பொருள் புதிய பொருளை உருவாக்கும் நிகழ்வு ஆகும். உதாரணமாக காகிதம் எரிதல், இட்லி மாவு புளித்தல், இரும்பு துருப்பிடித்தல் ஆகியவை வேதியியல் மாற்றங்களாகும்.
இயற்பியல் மாற்றம் என்பது பொருள்களின் வடிவம், அளவு மற்றும் பருமனில் மட்டும் ஏற்படும் மாற்றமாகும். காகிதம் கிழித்தல், நீர் கொதித்தல், சர்க்கரை நீரில் கரைதல் ஆகியவை இயற்பியல் மாற்றங்களாகும்.
நம்மைச் சுற்றியுள்ள அனைத்துப் பருப்பொருள்களையும் வேதிப்பொருள்களாகக் கருத முடியும். நாம் அருந்தும் நீர் (H₂O), சமையலுப்பு (NaCl) ஆகியவை வேதிப்பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
3.1 சோப்புகள் மற்றும் சலவைத்தூள்
குளியல் சோப்பு மற்றும் சலவை சோப்பு என இரண்டு வகையான சோப்புகளை நாம் பயன்படுத்துகிறோம். தாவர எண்ணெய் அல்லது விலங்குக் கொழுப்பினை அடர் சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH) கரைசலுடன் சேர்த்து குளிர வைக்கும்போது சோப்பு கிடைக்கிறது.