செல் என்பது உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும். ஒரு செங்கல் சுவரில் செங்கல் எவ்வாறு அடிப்படை அலகாக உள்ளதோ, அதுபோலவே நம் உடலின் அடிப்படை அலகு செல் ஆகும். அனைத்து உயிரினங்களும் ஒரு செல்லாலோ அல்லது பல செல்களாலோ ஆனவை.
5.1 செல்கள் - அறிமுகம்
செல்கள் ஓர் உயிரியின் அனைத்து அடிப்படைப் பண்புகளையும் செயல்பாடுகளையும் கட்டமைக்கின்றன. நம்மால் வெறும் கண்களால் செல்லினை காண இயலாது, ஏனெனில் அது அளவில் மிகச்சிறியது. கூட்டு நுண்ணோக்கியால் செல்களை காண இயலும். தற்காலத்தில் எலக்ட்ரான் நுண்ணோக்கியானது செல்களை நன்கு உருப்பெருக்கம் செய்து காணப் பயன்படுகிறது.
5.1.1 செல்லின் கண்டுபிடிப்பு
ராபர்ட் ஹூக் என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர், கணித அறிஞர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். இவர் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட நுண்ணோக்கியை மேம்படுத்தி ஒரு கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கினார். ஒரு முறை மரத்தக்கையை நுண்ணோக்கியினைக் கொண்டு கண்டபோது அதில் சிறிய ஒரே மாதிரியான அறைகளைக் கண்டார். இந்த கண்டுபிடிப்பின் அடிப்படையில் 1665 ஆம் ஆண்டு மைக்ரோகிராபியா என்ற தனது நூலினை வெளியிட்டார். லத்தீன் மொழியில் "செல்லுலா" என்பதற்கு சிறிய அறை என்று பொருள் ஆகும். செல்லைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு செல் உயிரியல் எனப்படும்.