நம் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி பல மாற்றங்கள் நிகழ்கின்றன. ஒரு பொருள் தன்னுடைய நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிகழ்வே மாற்றம் எனப்படும். பொருளின் ஆரம்ப நிலைக்கும் இறுதி நிலைக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடே மாற்றம் எனப்படும். மாற்றம் என்பது இயற்கையின் நியதியாகும்.
மாற்றங்களின் வகைகள்
இயற்கையில் பல்வேறு மாற்றங்கள் நம்மைச் சுற்றி நிகழ்கின்றன. மாற்றங்கள் வடிவம், நிறம், வெப்பநிலை, நிலை மற்றும் இயைபு போன்ற பண்புகளில் நிகழலாம். இதன் அடிப்படையில் மாற்றங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
- மெதுவான மற்றும் வேகமான மாற்றங்கள்
- மீள் மற்றும் மீளா மாற்றங்கள்
- இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள்
- விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத மாற்றங்கள்
- இயற்கையான மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள்
3.1.1 மெதுவான மற்றும் வேகமான மாற்றங்கள்
மெதுவான மாற்றங்கள்
சில மாற்றங்கள் நிகழ அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன (மணிகள் / நாட்கள் / மாதங்கள் / ஆண்டுகள்). இவை மெதுவான மாற்றங்கள் என அழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு: நகம் மற்றும் முடி வளர்தல், பருவநிலை மாற்றம், விதை முளைத்தல்.