தாவர உலகம் என்பது நம்மைச் சூழ்ந்துள்ள பச்சை உலகமாகும். உயிரினங்களின் வாழ்க்கைமுறை, அமைப்பு மற்றும் செயல்களைப் பற்றி பயிலும் இயற்கை அறிவியல் உயிரியல் ஆகும். தாவரங்கள் தங்களுக்குரிய உணவைத் தாங்களே தயாரிக்கின்றன; உடல் வளர்ச்சியடைகின்றன; மற்றும் இனப்பெருக்கம் செய்கின்றன. தாவரங்களின் பல்வேறு பகுதிகள் உணவாக, மருந்தாக, மரக்கட்டைகளாக, மற்றும் வாழிடமாக பயன்படுகின்றன.
4.1. தாவரத்தின் அமைப்பு மற்றும் செயல்கள்
நமது உடல் பல்வேறு உறுப்புகளைக் கொண்டது. அதுபோல, தாவரங்களும் இலை, தண்டு, வேர் மற்றும் மலர்கள் ஆகிய பாகங்களைக் கொண்டுள்ளன. தாவரங்கள் அமைப்பிலும், நிறங்களிலும் வேறுபட்டாலும், அவை ஒருசில பண்புகளில் ஒத்துள்ளன. பெரும்பாலான தாவரங்களின் தண்டு மற்றும் இலைகள் நிலத்திற்கு மேலேயும், அவற்றின் வேரானது நிலத்திற்குக் கீழேயும் உள்ளது.
பூக்கும் தாவரங்கள் இரண்டு முக்கியத் தொகுப்புகளைக் கொண்டுள்ளன:
- 1. வேர்த் தொகுப்பு
- 2. தண்டுத் தொகுப்பு
1. வேர்த் தொகுப்பு
வேர் என்பது ஒரு தாவரத்தின் முக்கிய அச்சின் கீழ்ப் பகுதியாகும். இது நிலத்திற்குக் கீழே காணப்படுகிறது. வேர்களில் கணுக்களும், கணுவிடைப் பகுதிகளும் இல்லை. அதன் நுனிப் பகுதியில் வேர்மூடி உள்ளது. வேர் நுனிக்குச் சற்று மேற்பகுதியில் வேர்த்தூவிகள் ஒரு கற்றையாகக் காணப்படுகின்றன. வேர்கள் நேர் புவிநாட்டம் உடையவை.