வினைச்சொல்
தமிழில் சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என நான்காகப் பிரிப்பர். இவற்றுள் வினைச்சொல் என்பது செயலையும் காலத்தையும் காட்டும்; வேற்றுமை உருபு ஏற்காது (வேற்றுமை உருபுகள் எவை என அறிக).
வினைச் சொற்களின் வகைகள்
- தெரிநிலை வினைமுற்று
- குறிப்பு வினைமுற்று
- பெயரெச்சம்
- வினையெச்சம்
- சிறப்பு வினை
- பொது வினை
என ஆறுவகைப்படும்.
தெரிநிலை வினைமுற்று
ஒரு தெரிநிலை வினைமுற்று அது குறிக்கும் வினை தொடர்பான ஆறு அறிவினையும் தெரிவிப்பதற்கு உரியதாக விளங்கும். அவை யாவன:
- வினையைச் செய்பவன்
- வினை செய்வதற்கு உரிய கருவி
- வினை செய்வதற்குரிய இடம்
- வினைக்குரிய செயல்
- வினை நிகழும் காலம்
- வினையால் செய்யப்படும் பொருள்
எடுத்துக்காட்டாக 'வரைந்தான்' என்னும் தெரிநிலை வினைமுற்றை நோக்குக:
| உறுப்பு | விளக்கம் |
|---|---|
| வரைதல் | நிகழ்வு / செயல் |
| வரைந்தான் | காலம் |
| அவன் வரைந்தான் | செய்பவன் |
| அவன் தூரிகையால் வரைந்தான் | கருவி |
| அவன் தூரிகையால் சுவரில் வரைந்தான் | இடம் |
| அவன் தூரிகையால் சுவரில் படம் வரைந்தான் | செய்யப்படும் பொருள் |