சிறு தெய்வ வழிபாடு
ஆசிரியர்: ச. கணபதிராமன்
தெய்வ வழிபாட்டின் தோற்றம்
சிறு தெய்வ வழிபாட்டின் தோற்றம் பழம் பொருளாகவே உள்ளது. உணவுப் பொருள்களை மட்டுமே தேடி வாழ்ந்த பழங்கால மனிதனுக்கு மனம் என்று விழிப்புணர்வு கொண்டதோ அன்று முதல் அவனுக்கு இறை நாட்டம் தொடங்கிவிட்டது எனலாம். இயற்கையோடு இயைந்து இயற்கையினின்று தன் தேவைகளைப் பெற்று வாழ்ந்த மனிதன் விழிப்புணர்வு பெற்றும் இயற்கையை உற்று நோக்கத் தலைப்பட்டான்.
அப்போது அவன் வியப்பையும், மகிழ்வையும், நன்றியுணர்வையும் பெற்றான். தன்னை வாழ்விக்கும் இயற்கையை வாழ்த்தத் தலைப்பட்டான். நீரையும், மலையையும், ஞாயிற்றையும் தனது வாழ்வுக்குத் துணையாகும் பிற இயற்கைச் சக்திகளையும் உள்ளத்தின் நிறைவோடு எண்ணிப் பார்த்தான். உள்ள நிறைவோடு தன்னை வாழ்விக்கும் இயற்கையை எண்ணிப் பார்த்த மனிதன் அந்த இயற்கையால் வரும் பாதிப்பையும் மரணத்தையும் அறிந்து தனக்குள் போராடினான். தன் ஆற்றலுக்கு மீறிய ஏதோ ஒரு பேராற்றல் தன்னை ஆட்டுவிப்பதை உணர்வு மூலமாகவும் பட்டறிவு மூலமாகவும் தெரிந்த மனிதன் அமைதி வேண்டி அந்தப் பேராற்றலிடமே அடைக்கலம் புகுந்தான். அதனையே மனிதன் அறிந்த தெய்வ வழிபாடு என்று சொல்லலாம்.
தொல்காப்பியத்தில் தெய்வங்கள்
அச்சம், போராட்டம், நன்றியுணர்வு முதலியனவற்றின் அடிப்படையில் மனிதன் உருவாக்கிக் கொண்ட கடவுட் கொள்கை தமிழ்ச் சமுதாய அளவிலும் தோன்றி வளர்ந்து இன்றியமையாத் தன்மையும் பெறுவதாயிற்று. தெய்வத்தைத் தொல்காப்பியம் கருப்பொருட்களின் வரிசையில் முன்னதாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.