தமிழக வரலாற்றில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம் சங்ககாலம் எனப்படும். அக்காலத்தில் எட்டுத்தொகை நூற்களில் ஒன்றான பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் வீரம், வெற்றி, வள்ளல் தன்மை ஆகியவற்றை விளக்கும் சங்க இலக்கியம்.
பதிற்றுப்பத்து — அறிமுகம்
பத்து + பத்து = பதிற்றுப்பத்து. சேரமன்னர் பதின்மரை பதின்மர் புலவர் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. ஆகையால் இந்நூல் 'பதிற்றுப்பத்து' என வழங்கப் பெறுவதாயிற்று.
எட்டுத்தொகை நூற்களுள் நான்காவதாக அமைந்துள்ளது. இந்நூலின் முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன (8 × 10 = 80 பாடல்கள்).
நூலின் சிறப்புகள்
- நூல் முழுவதிலும் 'பாடாண்திணை' என்னும் ஒரே புறத்திணையில் அமைந்த பாடல்களே உள்ளன.
- ஒவ்வொருபத்தின் இறுதியிலும் அப்பத்து யாரைப் பற்றி யாரால் பாடப்பெற்றது, பாடியவர் பெற்ற பரிசில், பாட்டுடைத் தலைவனின் சிறப்பு, அவன் எத்தனை ஆண்டுகள் சேரநாட்டை ஆண்ட இன்றியமையாத தகவல்கள் உள்ள 'பதிகம்' இடம் பெற்றிருப்பது மற்றொரு சிறப்பு.
- இந்நூல் சேரநாட்டை ஆண்ட மன்னர்களின் வீரம், வெற்றி, அரசியல், ஏகை, புகழ், நற்பண்பு ஆகியவற்றை விளக்குகிறது.