இந்தக் கதை ஒரு புலவருக்கும் ஒரு நகை வணிகருக்கும் இடையே நடைபெறும் உரையாடலையும், திருடர்கள் வந்த நிகழ்வையும் மையமாகக் கொண்டுள்ளது. கல்விச் செல்வமே நிலைத்த செல்வம் என்ற மையக் கருத்தை இக்கதை உணர்த்துகிறது.
நன்றி: பி.எம். முத்து, பண்பை வளர்க்கும் பண்பாட்டுக் கதைகள்
கதையின் சுருக்கம்
ஒற்றையடிப் பாதையில் ஒரு நகை வணிகரும் ஒரு புலவரும் சேர்ந்து நடந்து சென்றனர். நகை வணிகர் தன்னிடம் தங்கம், வைரம் உள்பட பல நகைகள் இருப்பதால் தன் செல்வமே சிறந்தது என்று கூறினார்.
புலவரோ, "என்னிடம் இருக்கும் செல்வமே சிறந்த செல்வம். அதை யாராலும் களவாட முடியாது; பிறருக்குக் கொடுத்தாலும் குறையாது" என்று கூறினார். வணிகர் புலவரின் பேச்சை நம்பவில்லை.
அந்நேரத்தில் திருடர்கள் கத்தியைக் காட்டி இருவரிடமும் உள்ளதை கேட்டனர். வணிகர் உயிர் பயத்தால் தன் நகைகளை எல்லாம் திருடர்களிடம் கொடுத்துவிட்டார். ஆனால் புலவர், "என்னிடம் எந்தப் பொருட்செல்வமும் இல்லை; கல்விச் செல்வம் மட்டுமே உள்ளது" என்று கூறி, திருடர்களுக்கு விருப்பமான பாடலைப் பாடினார்.
புலவரின் இனிமையான பாடலைக் கேட்ட திருடர்கள் மகிழ்ந்தனர். மேலும் பாட வேண்டினர். புலவரும் உற்சாகமாகப் பாடினார். திருடர்கள் அவரது பாட்டில் மயங்கி, வணிகரிடம் திருடிய நகைகளை புலவருக்கே பரிசாக அளித்தனர்.