கோவூர்கிழார்
கோவூர்கிழார் – அறிமுகம்
கோவூர்கிழார் உறையூருக்கு அருகிலுள்ள கோவூரில், வேளாளர் மரபில் பிறந்தார். இளமைப்பருவத்திலேயே கல்வி கேள்வியில் சிறந்து விளங்கினார். சான்றோர் பலரை அணுகி இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிதைகள் எழுதுவதில் ஆற்றல் பெற்றார்; நற்பண்புகளின் இருப்பிடமாகத் திகழ்ந்தார்.
நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, திருவள்ளுவமாலை ஆகியவற்றில் இவரின் பதினெட்டுப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
நலங்கிள்ளி அரசவையில் கோவூர்கிழார்
நலங்கிள்ளி என்ற மன்னன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான். அவன் கோவூர்கிழாரின் புலமையைப் பலர் வாயிலாகக் கேட்டு அறிந்தான். தம் அவைக்கு அவரை அழைத்து அரசு அவைக்களத் தலைவர் ஆக்கினான். அவரிடம் நட்புக்கொண்டு பல சிறப்புகளைச் செய்தான்.
கோவூர்கிழார் அஞ்சா நெஞ்சர்; யார் தவறு செய்தாலும் அத்தவற்றினைச் சுட்டிக்காட்டி, முறையாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இனிமையாகச் சொல்லித் திருத்துவதில் வல்லவர். அரசர்களானாலும், பிறரானாலும் கோவூர்கிழார் சொல்லுவதை ஏற்றுச் செயல்பட்டுள்ளனர்.
போரைத் தவிர்த்த புலவர்
சோழர் மரபில் தோன்றிய நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் நெடுங்காலம் பகைமை இருந்து வந்தது. ஒருமுறை இருவருக்கும் போர் மூண்டது. உறையூருக்கு அருகில் ஆவூர்க்கோட்டை இருந்தது. நலங்கிள்ளியின் படையினர் அக்கோட்டையை முற்றுகையிட்டனர்; நாள் பல கழிந்தன. கோட்டையினுள் இருந்த மக்கள் துன்புற்றனர்.