மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
அறிமுகம்
"யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுந்தார் ஒருவர்" — அவர்தாம் உ.வே.சாமிநாதர். பின்னாளில் அவரே அனைவராலும் தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்பட்டார். இத்தகைய மாணவரை உருவாக்கிய பெருமை அவர்தம் ஆசிரியரான மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் என்பவரையே சாரும்.
ஆசிரியரால் மாணவன் சிறப்படைவதுபோலவே, ஒரு ஆசிரியரும் நல்ல மாணவர்களால் பெருமையடைகிறார் என்பதற்கு இவ்விருவருமே சான்றாவர்.
இளமையும் கல்வியும்
மீனாட்சிசுந்தரனார் 1815ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் ஆறாம் நாளன்று திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எண்ணெய்க்கிராமத்தில் பிறந்தார். அவர்தம் பெற்றோர் சிதம்பரம் – அன்னத்தாச்சியார் ஆவர்.
மீனாட்சிசுந்தரனார் இளமையில் தமது தந்தையாரிடம் தமிழ் கற்றார். இலக்கிய இலக்கண நூல்களில் நன்கு புலமை பெற்றார். சிறுவயதிலேயே செய்யுள் இயற்றும் ஆற்றல் கைவரப் பெற்றார்.
கல்வியே வாழ்க்கை
மீனாட்சிசுந்தரனார் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் திரிசிரபுரத்தில் (திருச்சிராப்பள்ளி) வாழ்ந்தார். அதனால், அவரைத் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரனார் என்றே அழைத்தனர். அவரிடம் "கற்கவேண்டும்" என்ற வேட்கை தணியாததாக இருந்தது. அதனால், எப்பொழுதும் நூல்களைப் படித்துக்கொண்டே இருப்பார். அவர் தமிழ் இலக்கியத்திலும் சைவ சமய நூல்களிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.