நாடும் நகரமும் – இலக்கணமும் மொழித்திறனும்
ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம் – தமிழ் பாடம்
1. மாத்திரை
இலக்கணத்தில் மாத்திரை என்பது எழுத்துகளின் ஒலியின் அளவைக் குறிக்கும் சொல். மாத்திரை என்பது சிறிய ஒலியளவு ஆகும்.
கண் சிமிட்டும் நேரம் அல்லது விரல் சொடுக்கும் நேரம் மாத்திரையின் கால அளவாகும்.
- மெய்யெழுத்து – அரை மாத்திரை
- உயிரெழுத்து (குறில்) – ஒரு மாத்திரை
- உயிரெழுத்து (நெடில்) – இரு மாத்திரை
- உயிர்மெய் (குறில்) – ஒரு மாத்திரை
- உயிர்மெய் (நெடில்) – இரு மாத்திரை
இந்த அளவைத் தாண்டும் ஒலியளவை அளபெடை என்கிறோம்.
2. எண் (ஒருமை – பன்மை)
ஒருமை, பன்மை என எண் இருவகைப்படும்.
- ஒன்றைக் குறிப்பது ஒருமை; ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை.
- பூ – ஒருமை; பூக்கள் – பன்மை
- மாணவன் – ஒருமை; மாணவர் – பன்மை
விதி: பெயர் ஒருமையில் இருந்தால், வினைமுடிபும் ஒருமையிலேயே இருத்தல் வேண்டும்.
(எ.கா.) திருடன் பிடிபட்டான்.