தயக்கம் இன்றித் தமிழிலேயே பேசுவோம்
வீடு – உரைநடை
மலர் ஆறாம் வகுப்பு படிக்கிறாள். அவளது அப்பா "போஸ்ட் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வர்றியா?" என்று கேட்டார். மலர், "அஞ்சல் நிலையம்'னு சொல்லத் தெரியாதா உங்களுக்கு?" என்று கேட்டாள். அப்பா, "சொல்லத் தயக்கமா இருக்கு. யாரும் சிரிப்பார்களோன்னு பயமா இருக்கு" என்றார். மலர் ஆசிரியர் சொன்னதை நினைவுகூர்ந்து, "இதற்குப் பேரு தாழ்வுமனப்பான்மை" என்று கூறினாள். அப்பா படிப்படியாக மாற்றிக்கொள்வதாக உறுதியளித்தார்.
வீதி – உரையாடல்
அப்பாவும் மலரும் பேசிக்கொண்டே நடக்கிறார்கள். மலர் அப்பாவிடம் சிறுவயதில் மதுரையில் 'பெரியார் பேருந்து நிலையம்'ன்னு பெயர்ப் பலகையில் படித்ததாக நினைவூட்டினாள். 30-40 ஆண்டுகளுக்கு முன்னர் யாரும் புரிந்துகொள்ளாமல் இருந்தது இப்போது எல்லாருக்கும் புரிகிறது என்று அப்பா கூறினார். "புகைவண்டி" என்ற சொல் வரலாற்று நினைவை கொண்டுவருவதாலும், "தொடர்வண்டி" என்ற வழக்கமும் இருப்பதாக அப்பா விளக்கினார். புகைப்படம் என்ற சொல்லும் தமிழில் நிலைத்துள்ளதை எடுத்துக்காட்டினார்.
வகுப்பறை
வகுப்பில் ஆசிரியர் "போர்டை அழி" என்றார். மலர் "கரும்பலகையை தானே!" என்று அடக்கமாக கூறினாள். ஆசிரியர் "நாக்கில் களிம்பு போல ஒட்டிக்கிடக்கு பழகிப்போன சொல்" என்றார். "எல்லாரும் உணர்ந்து பேசப் பேசக் களிம்பு கரையும்" என்றார். அடுத்த நாள் வருகைப் பதிவின்போது, மலர் பெயரின் முன்னெழுத்தை (இனிஷியல்) ஆங்கிலத்திலும் பெயரைத் தமிழிலும் இருமொழி கலந்து எழுதுவது முறையா என்று கேட்டாள். ஆசிரியர் "முறையற்றதுதான்! ஒரே மொழியில் எழுதல் வேண்டும்" என்று கூறி, இனிமேல் பெயரையும் முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுதுவோம் என்று வகுப்பு உறுதிகொண்டது.