தேசியம் காத்த செம்மல்
பசும்பொன் முத்துராமலிங்கர்
பாரத நாடு பழம்பெரும் நாடு. இந்நாடு அயலவர் ஆட்சிக்கு அடிமைப்பட்டது. அடிமைத்தளை நீங்குவதற்குக் கண்ணீரும் செந்நீரும் சிந்தினர் பலர். தமிழகத்தில் சுப்பிரமணிய சிவா, வ.வே.சுப்பிரமணியம், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம், வாஞ்சிநாதன், திருப்பூர்க் குமரன் முதலியோர் விடுதலைக்குப் பாடுபட்டனர். இவர்களுள் ஒருவர் பசும்பொன் முத்துராமலிங்கர்.
பிறப்பும் வளர்ப்பும்
இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் என்னும் ஊரில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முப்பதாம் நாள் பிறந்தவர் முத்துராமலிங்கர். இவருடைய தந்தையார் உக்கிர பாண்டியனார், தாயார் இந்திராணி அம்மையார். இவர் அன்னையை இளமையிலே இழந்தார். தாயோடு அறுசுவை உண்டி போயிற்று. எனினும், முத்துராமலிங்கருக்கு இசுலாமிய பெண்மணி ஒருவர் தாயாகிப் பாலூட்டி வளர்த்தார். பாட்டியாரின் அன்பணைப்பில் இவர் வளர்ந்தார். பாட்டியின் வீட்டில் வளர்ந்த நாள்களில் இவருக்குக் கற்பித்த ஆசிரியர் குறைவற வாசித்தான் என்பவர் ஆவார்.
பள்ளிக்கல்வி
முத்துராமலிங்கர் தம் தொடக்கக் கல்வியைக் கமுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் கிறித்தவப் பாதிரியார்களிடம் பெற்றார்; பசுமலை உயர்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் பயின்றார். பின்னர், இவர் ஐக்கியக் கிறித்தவப் பள்ளியில் படித்தார்; இராமநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்தார். இவர் இராமநாதபுரத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது அந்நகரில் பிளேக் நோய் பரவியது; அதனால், இவருடைய கல்வியும் நின்றது.