கடைசிவரை நம்பிக்கை
இது ஒரு சிறுமியின் உண்மை வரலாறு. அவள் பெயர் சடகோ. முழுப் பெயர் சடகோ சசாகி. அவள் ஜப்பான் நாட்டுச் சிறுமி.
அணுகுண்டு விபத்து
ஜப்பானில் இரு இடங்களில் அமெரிக்கா குண்டு வீசியது. ஒன்று ஹிரோசிமா; மற்றொன்று நாகசாகி. அக் குண்டுவீச்சில் இரண்டு இலட்சம் ஜப்பானியர் இறந்தனர். ஹிரோசிமாவுக்கு அருகில் சடகோ, தன் பெற்றோருடன் வசித்து வந்தாள். அப்போது அவளுக்கு இரண்டு வயது. குண்டுவீச்சில் அவள் குடும்பம் தப்பியது.
நோய் கண்டறிதல்
சடகோ பள்ளியில் சேர்ந்து படித்து வந்தாள். அவளுக்கு 11 வயது ஆனது. ஒரு நாள் பள்ளியில், அவள் விளையாடிக்கொண்டு இருந்தாள். அப்போது, திடீரென மயங்கி விழுந்தாள். மருத்துவர் அவளைச் சோதித்துப் பார்த்தார். அவளுக்குப் புற்றுநோய்! அணுகுண்டு வெடித்தபோது உண்டான கதிர்வீச்சுதான் இதற்குக் காரணம். சடகோவை மருத்துவமனையில் சேர்த்தார்கள். புற்றுநோய் ஆளைக் கொல்லும் என்று சடகோ தெரிந்து கொண்டாள்.
தோழி சிசுகோவின் நம்பிக்கை
ஆனால், சடகோ சாக விரும்பவில்லை; உயிர்வாழவே ஆசைப்பட்டாள். ஒரு நாள் சிசுகோ என்ற தோழி, அவளைப் பார்க்க வந்தாள். சிசுகோ கை நிறைய காகிதங்கள் எடுத்து வந்தாள். அந்தக் காகிதங்கள் சதுரம் சதுரமாக வெட்டப்பட்டு இருந்தன. ஒரு காகிதத்தைச் சிசுகோ எடுத்தாள். அப்படியும் இப்படியும் காகிதத்தை மடக்கி கொக்கு ஒன்று செய்தாள். ஜப்பானியர் வணங்கும் பறவை – கொக்கு.